search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் கடைகளில் தீ விபத்து"

    சேலத்தில் 2 செல்போன் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.

    சேலம்:

    சேலம், அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 37). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே வீரபாண்டியார் வணிக வளாகத்தின் பின்புறத்தில் இரண்டு செல்போன் கடைகள் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு 2 செல்போன் கடையையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென செல்போன் கடையில் இருந்து குபு, குபுவென புகை மூட்டம் கிளம்பி வெளியே வந்தது.

    இதை பார்த்ததும் அருகே டீக்கடை வைத்திருந்தவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் கடைமுழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    சிறிது நேரத்தில் தீ பக்கத்தில் உள்ள மற்றொரு செல்போன் கடைக்கும் பரவியது. கடைக்குள் இருந்த செல்போன்கள், ஏ.சி., மின் விளக்குகள் தீயின் தாக்கம் தாங்காமல் டமார்... டமார் என வெடித்து சிதறியது. மேலும் பொருத்தப்பட்டிருந்த மின்வயர்கள், மின்விசிறி போன்றவை தீயில் கருகியது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து 2 கடைகளிலும் தண்ணீரை குழாய் மூலம் பீய்ச்சி அடித்தனர். எனினும் தீ உடனடியாக அணைய வில்லை. இதையடுத்து 4 புறமும் நின்று தீயின் மீது சுற்றி சுற்றி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தீ கொஞ்சம், கொஞ்சமாக அணைய தொடங்கியதையடுத்து வீரர்கள் உள்ளே சென்று தண்ணீர் மற்றும் ரசாயண பொருட்களை செலுத்தி தீயை அணைத்தனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சுமார் 2 மணி நேரம் வீரர்கள் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே உரிமையாளர் நவீன்குமார் தனது 2 கடைகளும் தீப்பிடித்து எரிவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள், மெமரி கார்டு, பென் டிரைவ் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

    பள்ளப்பட்டி போலீசார் இந்த விபத்து மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×